கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியன்

நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 14 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியானகத் தெரிவு செய்யப்பட்டது.

கோண்டாவில் இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியும் கோண்டாவில் பரஞ்சோதி மகா வித்தியாலயமும் மோதிக்கொண்டன.

போட்டி ஆரம்பமாகி முடிவடையும் வரை இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டன. ஆனாலும் முதல் பாதி ஆட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி ஒரு கோலைப் பெற்று முன்னிலையில் இருந்த வேளையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக காணப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. இதனையடுத்து 1 க்கு 0 என்ற கணக்கில் வென்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

Posted  by ratnam