யாழ் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதற்கு மாணவர்களிடையே காணப்படும் அக்கறையின்மையே காரணம் என  கொக்குவில் இந்து கல்லூரில் பிரதி அதிபராக கடமையாற்றி ஒய்வு பெறும் கந்தப்பிள்ளை வேலாயுதம் தெரிவித்தார்.
டான் தொலைக்காட்சியின் பத்திரிகை ஆய்வு நிகழ்ச்சியில் தொடர்புகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

1972களில் கல்வித் தரத்தில் முதலாவது இடத்திலிருந்த யாழ் மாவட்டம் இன்று இறுதி இடத்தில் உள்ளது.  இந்த வீழச்சி வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் யாழ்.மாவட்டத்தை கல்வித் தரத்தில் உயர்த்துவதற்கு தமது கல்விச் சமூகம் படாதபாடு பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கல்வித் தரம் உயர்வடைவதற்கு பாடசாலைக்கல்வியே மிகவும் முக்கியமானது. இதற்கு பாடசாலை வேளைகளில் நேர அட்டவனைப்படி அனைத்துப் பாடங்களும் ஒழுங்காக நடைபெற்றாலே போதும். ஆனால், ஆசிரியர்கள் கருத்தரங்குகள், விடைத்தாள திருத்தும் பணிகள் என வேறு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டியுள்ளதால் ஒழுங்காக கற்பிக்க முடிவதில்லை. இதுவும் கல்வி வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைகின்றது என்றும் பிரதி அதிபர் க.வேலாயுதம் கூறினார்.

அத்துடன் “பரீட்சையில் ஒரு மாணவன் புள்ளி குறைவாக எடுக்கும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் அவனுக்கு பரீட்சை வினாத்தாள்களைக் கொடுக்காது, அவனுக்கு எந்தக் கேள்விக்கு  பதிலளிக்க கஷ்ரமாக உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதனை பல தடைவை அவனுக்கு சொல்லிக் கொடுத்து, அதேபோன்று சில கேள்விகளை வழங்கி அதற்கு விடையளிக்க வைக்கும்போது அந்தப் பாடத்தில் அவனை  மதிப்பெண்கள் பெற வைக்கமுடியும். இதனால் அந்த மாணவனுடைய கல்வித்தரம் மட்டுமன்றி, யாழ்ப்பாணத்துடைய கல்வித்தரமும் உயர்வடையும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,  ஆசியர்கள் மட்டுமன்றி மாணவர்களே கல்வியில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். ஆனால்,இன்றைய மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை எனவும்,  நூலகங்களைப் பயன்படுத்துவதில்லை எனவும் கொக்குவில் இந்து கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்ற கந்தப்பிள்ளை வேலாயுதம் அவர்கள் கவலை வெளியிட்டார்