யாழ்.நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட பொற்பதிப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெள்ளவாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் அப்பகுதியில் டெங்குநோய்ப் பெருக்க அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பிளாஸ்டிக் ரின்கள் மற்றும் இளநீர்க்கோம்பைகள் போன்றவற்றில் நீர்தேங்கி நிற்பதோடு நுளம்புக் குடம்பிகளும் காணப்படுகின்றன.

பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகருக்கு எடுத்துக்கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

யாழ்.பிரதேசத்தில் டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  சுகாதாரத் திணைக்களத்தினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்ற இக்காலப்பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர் இவ்வாறு அசமந்தமாக செயற்படுவதையிட்டு பிரதேச மக்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்குநோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நாள்தோறும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனைவிட பிரதேச வைத்தியசாலைகளிலும் பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை டெங்குநோய் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் உடனடியாக அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுமாறு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சில நோயாளர்கள் தனியார் வைத் தியசாலைகளில் சிகிச்சை பெற்று அவர்களது உடல் நிலை மோசமடைந்த நிலையில் அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இதனால் தேவையற்ற உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன. எனவே டெங்கு நோய் என சந்தே கிக்கும் நோயாளர்கள் காலம் தாழ்த்தாது உடனடியாகவே அரச வைத் தியசாலைகளில் சிகிச்சை பெறும் படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு நோயின் தாக்கத்துக்கு இலக்காகி தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வயது சிறுவன் ஒருவன் கடந்த 23ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
-thanks  http://newjaffna.com