கொக்குவில் கிழக்குப் பொற்பதி விநாயகர் ஆலயத்துக்கு அண்மையில்  (27 ஏப்ரல் )ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டோவும் மோட்டார்ச் சைக்கிளும் மோதியதில் நால்வர் காயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு கொக்குவில் பொற்பதி சந்திப்பக்கமாகவிருந்து வந்த ஆட்டோ கொக்குவில் பொற்பதிப் பிள்ளையார் கோயிலடிக்கு முன்னால் அப் பகுதியில் காணப்பட்ட குழியொன்றைக் கடந்து மறுபக்கமாக ஆட்டோவைச் செலுத்த முற்பட்ட போது எதிரே கோண்டாவில் பக்கமாகவிருந்து வந்த மோட்டார்ச் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய ஆட்டோ வீதியின் குறுக்காகப் புரண்டு கிடந்தது.அதில் பயணித்த ஆட்டோ உரிமையாளர் வி.ஜனகன்(வயது-30) உட்பட அதில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனர். அத்துடன் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த அதே பகுதியைச் சேர்ந்த கே.தவரூபனும் காயங்களுக்குள்ளானார்.
காயமடைந்த அனைவரும் பிரதேச மக்களின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்துக்குள்ளான ஆட்டோவும்,மோட்டார்ச் சைக்கிளும் கடுமையான சேதங்களுக்குள்ளானது.
ஆட்டோ வேகக் கட்டுப்பாட்டை இழந்ததுடன் மறுபக்கம் ஆட்டோவைச் செலுத்தியமையுமே விபத்துக்கான காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விபத்தையடுத்து பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.எனினும் விபத்துடன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதையடுத்து விபத்துக்குள்ளான ஆட்டோவும்,மோட்டார்ச் சைக்கிளும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய்ப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.